அமெரிக்காவில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு மட்டுமில்லாமல் பேய் மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் அங்குள்ள பிராங்கிளின் (Franklin) நகரில் நேற்று முன்தினம் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரண்டு வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்தில் 4 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்களை மீட்புப்படையினர் நேற்று காலை மீட்கப்பட்டனர். மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி சிலர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.