கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், மருத்துவமனைகளில் 92,406 படுக்கை வசதிகள் உள்ளன, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும், கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என கூறியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது . அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.