இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் தனியார் வங்கிகளின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ, சிட்டி வங்கி, கோடக் மகிந்திரா ஆகிய வங்கிகளின் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி என குறைக்கப்பட்டுள்ளது. பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும்.
நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக மொபைல் வங்கி மற்றும் இண்டர்நெட் வங்கியை பயன்படுத்தி வீட்டிலிருந்து பாதுக்காப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.