கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது.
இதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று அந்நாடு நம்புகிறது. தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் 34 ஆயிரத்து 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் coronavirusmedicalkit.com என்ற இணையதளம் கொரோனா கோவித் 19 வைரஸ் தடுப்பு மருந்துகளை தாங்கள் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தது. 4.95 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இணைய தளத்தின் முகப்பில் கூறப்பட்டிருந்தது.
இன்னும் கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த இணைய தளத்தின் விளம்பரம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இது தொடர்பான விசாரணையில் இது ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த புகாரை விசாரித்த அமெரிக்காவின் டெக்சாஸ் நீதிமன்றம் அந்த இணையதளத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது.
உலகமே கொரோனா பீதியில் உறைந்து போயிருக்கும் நிலையில், இந்தத் துயரமான சமயத்திலும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் நடப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.