Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறினார். அவர் கூறியதாவது, லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், திருப்பூரை சேர்ந்த 48 வயதான நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையிலும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்றும் தெரிவித்தார். 

மேலும் மதுரை அண்ணாநகரை  சேர்ந்த 54 வயது நபர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர்; இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் மற்ற சிகிச்சைகளுக்கு அனுமதியில்லை. கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே ஓமந்தூரார் மருத்துவமனையை ஏற்பாடு செய்துள்ளோம். கொரோனா சிகிச்சைக்காக 300 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது. 1 கோடி மாஸ்க், 500 வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். சென்னை, திருச்சி, கோவை, புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர், தஞ்சை, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

மேலும் கொரோனா குறித்து சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்பே அதிகார்வப்பூர்வமானது. விருதுநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  தனிமைப்படுத்தல் என்பது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு என்றார். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். 12,519 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |