கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே கொரோனா தடுப்புத் தொடர்பான காணொளிக் காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுங்க துறைகளை சேர்ந்த 2000 அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது சீன வல்லுநர்கள் தாங்கள் தொற்றுநோய் (கொரோனா) தடுப்பு அனுபவத்தை தெற்காசிய நாடுகளின் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்தது. அப்போது இந்திய தரப்பில், முகக்கவசம் மற்றும் கையுறை போன்றவை அதிக அளவில் தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொரோனாவின் பிறப்பிடம் சீனா தான்.. அந்நாட்டின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் முதலில் கொத்து கொத்தாக கொரோனா மக்களை காவு வாங்கியது. அதன் பின் நாளடைவில் சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. தற்போது கடந்த சில நாட்களாக சீனாவில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. காரணம் சீன மருத்துவர்கள் தான்.. இரவு பகல் பாராமல் கொரோனாவுக்கு எதிராக போராடி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்..
இந்த போராட்டத்தில் சில மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் புகைப்படத்தை நகரம் முழுவதும் வைத்து கவுரவித்து வருகிறது சீனா. ஆகவே, சீனா இந்தியாவுடன் இணைந்து போராட தயார் என்று சொல்லி இருப்பதால் கூடிய விரைவிலேயே கொரோனாவை இந்தியாவில் ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.