சென்னை அருகே காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவள்ளூர் தொகுதியை அடுத்த பெரியகுப்பம் நகரில் பாஸ்ட் புட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆகாஷ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பின் பணம் கொடுக்காமல் சென்றதால் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் ஆத்திரமடைந்து சாப்பிட்டதற்கு பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆகாஷ் அந்த ஊழியரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25 தையல் போடப்பட்டது.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற அதிகாரிகள் தலைமறைவான ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்த சூழ்நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அவர் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து,அங்கு விரைந்த அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர். பின் தப்பி ஓட முயன்ற ஆகாஷ் காவல்துறை அதிகாரி ஒருவரை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடினார்.
இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அவன் காலில் துப்பாக்கியால் சுட்டார். பின் படுகாயமடைந்த அவரை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.