Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் கொடுக்க முடிவெடுத்தது ஹரியானா அரசு… பரோலில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் தொற்று சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதேபோல, சிறைக்கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் பரோல், இடைக்கால ஜாமீன் வழங்கி கைதிகளை விடுவிக்கவும் அனுமதி வழங்கலாம் என அறிவித்தது. இதன் மூலம் சிறைச்சாலையில் கைதிகளின் நெரிசலை குறைக்கலாம் என அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1,184 பேர் பரோலில் விடுவிக்க பட்டுள்ளனர். மத்திய புழல் சிறை, மதுரை மத்திய சிறை, தேனி, அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட கிளை சிறைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல், பல்வேறு மாநிலங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஹரியானா அரசாங்கமும் சிறை கைதிகளை பரோலில் விடுவிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பரோலில் இருப்பவர்களுக்கு 4 வார சிறப்பு பரோல் வழங்கப்படும் என்ற சலுகையையும் அறிவித்துள்ளது. பரோல் முடிந்து சிறை திரும்ப உள்ள கைதிகளுக்கு அமைதியான முறையில் அவர்களுக்கு 6 வார பரோல் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானாவில் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |