திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி,
இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி பின் முருகன் சத்தியமாக இனி வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, பொதுமக்கள் தங்களது இஷ்டப்பட்ட தெய்வத்தின் மீது சத்தியம் செய்து வீட்டிற்கு சென்றனர். மேலும் திண்டுக்கல்லின் மற்றொரு பகுதியில் அங்குள்ள பிரபல ரவுண்டானாவில் இனி வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்று கூறிக்கொண்டே பத்து முறை சுற்றி வர வேண்டும் என்றும் நூதன தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.