இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, ” கொரோனா தொற்று காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அந்த 3 பேரில் 85 வயது மூதாட்டியும், பவ்நகரை சேர்ந்த 70 வயது நபர் ஒருவரும் அடங்குவர். மேலும் மூதாட்டி சவுதி அரேபியா சென்று வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை சார்பில் சுமார் 1 கோடி மக்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 1,60,62,000 மக்களுக்கு தோற்று நோய், கடுமையான சுவாச நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது எனவும், அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்”. முன்னதாக குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 144 தடை உத்தரவு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் தொற்று நோய் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.