நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ” வீடுகளுக்கு சென்று உணவு டெலிவரி செய்யும் பணிகளுக்கு வாகனங்களில் செல்ல விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார். அவ்வாறு, உணவு விநியோகம் செய்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது எனக் கூறினார். டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மொஹல்லா கிளினிக்குகள் தொடர்ந்து செயல்படும்” என தெரிவித்தார்.
இதையடுத்து செய்தயாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல் ” அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஆன்லைன் சேவை வழங்குநர்கள் / மின் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் சாலையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் இயங்கும்” என தெரிவித்தார். அதேபோல கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை பரிசோதனை செய்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.