அனைத்து வீடுகளிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படுகிறது, அது ஏன் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாக இருந்து என் குலத்தை காப்பாற்ற என்று வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி தீபம் என்று பெயர் வந்தது. அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக அருளை பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வருகிறார்கள்.
புகுந்த வீட்டில் முதன் முதலாக காமாட்சி விளக்கு ஏற்றுவதற்கு இதுதான் காரணம். அதோடு குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள் புரிவதால் முதல் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை. மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
இந்த விளக்கு மிகவும் புனிதமானது. இதில் கஜ லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதுவே அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் விளக்கிற்கு பூவும் பொட்டும் வைத்து மங்கல தீபம் ஏற்றி தினமும் வழிபடுவது சிறந்தது. பெண்களுக்கு திருமண சமயங்களில் சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்கும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
புது மனை புகும்பொழுது மணமக்கள் வலம் வரும் பொழுதும், அனைத்து இருளையும் நீக்கி அருள் ஒளியை அனைவருக்கும் அளிப்பதற்கு, பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கு.