சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சீனா முடங்கிப்போனது. அங்கு ஏப்ரல் 8ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிருந்த நிலையில் தற்போது புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாததால் ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வூகான் நகரில் 30 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனினும் ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பாளர் பணி அமர்த்தப்பட்டு பயணிகளை சோதனை செய்த பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கின்றனர். வரும் சனிக்கிழமை முதல் மெட்ரோ பாதைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.