Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 3 நாடுகளில் 1,795 பேர் மரணம்… கொலை நடுங்கச் செய்யும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,795 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

 சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 198 நாடுகளில் பரவி அச்சுறுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிக்கித் தவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரசால் இதுவரையில் 5, 27,288 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23,927 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.

முதலில் வேகமாக பரவத் தொடங்கிய சீனாவில் தற்போது அதன் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொரோனாவின் பிடியில் மாட்டி தவிக்கிறது.  இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 712 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,215 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 718 பேர் இறந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனா  தாக்குதலுக்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,365 ஆக உயர்ந்திருக்கிறது. இத்தாலி மற்றும் ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1696 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி விட்டது அமெரிக்கா.

சீனாவில் கொரோனா வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,285 இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,312 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 82,523 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |