சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே பயப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்காக தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருள்கள் கொள்ளை போயிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
பின்னர், இது குறித்து கார்த்திகேயன் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி பார்த்தபோது, அதில் கொள்ளையடிக்கும்போது மட்டுமே முகமூடி அணிந்திருந்ததும், வீட்டுக்குள்ளே வரும்போது முகமூடி அணியாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய 2 மணி நேரத்தில், மன்னார் (எ) எழிலரசன் தான் கொள்ளையன் என்பதை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர். மேலும், அந்தக் கொள்ளையன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் தாம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும், பலமுறை திருட்டு வழக்குகளில் சிறைக்குச் சென்று திரும்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, கொள்ளையனைப் பிடிக்க சேலையூர் துணை காவல் ஆணையர் தேவராஜின் உத்தரவின் பேரில் பீர்க்கன்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து கொள்ளையனைத் தீவிரமாக தேடி வந்தனர். பின்பு, ஒரு வழியாக கொள்ளையனின் விலாசத்தைக் கண்டறிந்த போலீசார், அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், கொள்ளையன் சிக்கவில்லை, அவனது செல்ஃபோன் எண் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.
பின்னர் செல்ஃபோன் எண்ணை வைத்து டிரேஸ் செய்த காவல் துறையினர், புதுச்சேரி மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், கொள்ளையனின் செல்ஃபோன் எண் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததால் அவரைப் பிடிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், 7 நாள்களுக்குப் பிறகு அவரது செல்ஃபோன் எண் பெங்களூரில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதனையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அங்கேயும் அவரை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.
அதன் பின்னர், காவல் துறையினரின் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது, சுமார் 70 நாள்களுக்குப் பிறகு கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக காட்டியுள்ளது. இந்த முறை கொள்ளையனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று காவல் துறையினர் மாறுவேடத்தில் சென்றுள்ளனர். அங்கு பேருந்தில் செல்வதற்காக நின்றுகொண்டிருந்த கொள்ளையனை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், காவல் துறையினரின் பாணியில் திருடன் மன்னாரை விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையடித்த நகைகள் உத்திரமேரூரில் இருக்கும் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கொள்ளையனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு தனிப்படை சென்றது. அங்கு சென்ற காவல் துறையினர், ரூ 30 லட்சத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கொள்ளையனின் வீட்டைப் பார்த்து பிரம்மித்து போயினர்.
பின் வீட்டை சோதனை செய்ததில், சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த நகைகள் சுமார் 78 சவரன் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் சிக்கின. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர், கொள்ளையனின் வீட்டில் வைத்தே தீவிர விசாரணையை நடத்தினர்.
இந்த குற்றச் சம்பவங்களுக்கு வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என காவல் துறையினரின் பாணியில் கேட்டபோது, இச்சம்பவங்கள் அனைத்திற்குமே தனது மனைவிதான் உடந்தையாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.
மனைவி இப்போது எங்கே என காவல் துறையினர் கேட்ட கேள்விக்கு, அவர் பெருங்களத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் எனத் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஒரு நிமிடம் தள்ளாடிய காவல் துறையினர், அப்பகுதி காவல் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்தனர். கொள்ளையன் சொன்னது போலவே அங்கு அவர் நோட்டமிட்டு இருந்ததைப் பார்த்த போலீசார் , 40 வயது அம்முவை அலேக்காக தூக்கி சென்றனர். பின்னர், இருவரையும் பீர்கன்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு போலீசாரிடம் கொள்ளையன் கொடுத்த வாக்குமூலத்தில், “30 வருடங்களாக திருட்டை தொழிலாக செய்து வந்தேன். என் முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டாள். அதன்பிறகு நான் தனியாகவே இருந்து வந்தேன். இந்த சூழலில் உத்திரமேரூரில் இருக்கும் ஒரு வீட்டில் கொள்ளை யடிக்கப்போகும் போதுதான் அம்முவைப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டது.
என்னுடன் நீ வந்தால் நிறைய பணம், நகைகளைப் பார்க்கலாம் என்று கூறியதும் என்னுடன் அம்மு சரி என கூறி வந்துவிட்டார். அதன் பிறகு தான் நானும், அம்முவும் சேர்ந்து நிறைய இடங்களில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினோம்.
அதிநவீன (விலை உயர்ந்த) செல்போனை பயன்படுத்தினால் காவல் துறையினரிடம் எளிதில் சிக்கிவிடுவோம் என்பதற்காக குறைந்த விலை கொண்ட செல்போனை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். அதுமட்டுமின்றி 7 நாள்களுக்கு ஒரு முறைதான் எனது செல்போனை ஆன் செய்து அம்மு கொடுக்கும் தகவலை நான் பெற்றுக்கொள்வேன்.
ஒரே இடத்தில் இருந்தாலோ அல்லது விடுதியில் அறை எடுத்து தங்கினாலோ எளிதில் போலீசாரிடம் சிக்கிக்கொள்வேன் என்பதற்காகவே பேருந்து நிலையத்தில் குளித்துவிட்டு, சொகுசுப் பேருந்துகளில் ஏறி, அடுத்த வீடு கொள்ளையடிக்கும் தகவல் கிடைக்கும் வரை நான் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருப்பேன். என்னுடைய கனவே 1 கோடி ரூபாயில் வீடு கட்ட வேண்டும் என்பதுதான், அதற்காகத்தான் நான் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளான்.