தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், சிலர் இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை போலீசார் தோப்பு கரணம் போட சொல்லியும், எச்சரித்தும் அனுப்பி வந்தனர்.
ஆனால் தொடர்ந்து இது போன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உத்தரவை மீறி பொதுமக்கள் நடப்பதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 4,100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். சென்னையை பொருத்தவரையில் 144 தடை உத்தரவை மீறியதற்காக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 86 வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சமூக பொறுப்புணர்வு இல்லாமல் இன்னும் சிலர் சாலையில் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதற்காக டிஜிபி திரிபாதி 6 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.