மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதே போல பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 724லிருந்து 743ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகமாக கொரோனா பாதித்த மாநிலம் மகாராஷ்டிரா என்றும் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
அடுத்தபடியாக கேரளாவில் 135 பேருக்கும் , கர்நாடகாவில் 55 பேருக்கும் , ராஜஸ்தானில் 46 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.