சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.அங்கு ஏப்ரல் 8ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிருந்த நிலையில் தற்போது புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாததால் ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது.
இதனால் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வூகான் நகரில் 30 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து அயல்நாட்டினர் யாரும் சீனாவுக்குள் நுழையக் கூடாது என்று சீனா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ,சீனாவின் நேஷனல் இமிகிரேஷன் அட்மினிஸ்ட்ரேஷனும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டினர் யாரும் சீனாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகத் தடைவிதிக்கப்படுகிறது. சீன விசா பெற்றிருப்பவர்கள், சீனாவில் குடியுரிமை பெற்றிருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் வெளிநாட்டினராக இருந்தால் சீனாவில் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.