சிங்கப்பூரில் இருந்து வந்த கேரளா வந்த துணை ஆட்சியர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்றதால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் தனது விடுமுறையின் போது சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து மார்ச் 19ஆம் தேதியன்று பணிக்குத் திரும்பிய அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவரும் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அடுத்த சில நாட்களாக அவருடைய அறை காலியாகவே இருந்துள்ளது.
அதை தொடர்ந்து, அதிகாரிகள் போன் செய்து பார்த்தபோது, பெங்களுருவில் உள்ள உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லை. இதனால் அவர் உத்தரப்பிரதேசத்தில் அவருடைய வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அப்துல் நசீரின் விசாரணை, அறிக்கையை தயார் செய்து மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில், “இது பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அதிகாரியின் பெரும் குறைபாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் துணை ஆட்சியர் அனுபம் மிஸ்ரா, வீட்டுக்குத் திரும்புவதற்கான அனுமதியாக வீட்டுத் தனிமைப்படுத்தலை தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கமளித்துள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மாநில அரசு அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.