கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது.
ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே வந்து கொண்டிருந்தனர். காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டிலேயே இருங்கள் என்று பல்வேறு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் பொதுமக்கள் அதையும் மீறி வெளியே செல்வதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 7, 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.