ஈரோட்டில் கொரோனா அச்சம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வந்த நிலையில் நேற்று தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென இறந்துவிட்டார்.
இவர் இறந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவ, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வந்து சென்றதால் இறந்த பெண்ணுக்கு கொரோனா ஏற்பட்டதாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்ததாகவும் வதந்திகள் பரவின. இதை உண்மை என நம்பி ஈரோடு பகுதியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பணியாளர்களும் கடையை இழுத்து மூடி ஓடிவிட்டனர். பின் இதுகுறித்து கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் தகுந்த விளக்கமளித்து கடையை திறக்க வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.