Categories
அரசியல்

நான் ‘கொரோனா’ வைரஸ்… நூதன முறையில் விழிப்புணர்வு… அசத்தும் இன்ஸ்பெக்டர்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம்  இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Image

கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.

இதனிடையே, பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு (Rajesh Babu) கொரோனா வைரஸ் வடிவமுடைய  ஹெல்மெட் அணிந்துகொண்டு, பாடி மேம்பாலத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்த அவர், அவர்களிடம் கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் எச்சரித்தார்.

Image

இதுகுறித்து பேசிய அவர், “கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், இதுபோன்று பயம் காட்டும் வகையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகிறோம்” என்று கூறினார்.

காவல் ஆய்வாளர் மேற்கொண்ட இந்த நூதன முறை விழிப்புணர்வு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் கூறியது போல அனைவருமே கொரோனாவின் தாக்கத்தை புரிந்து கொண்டு வீட்டில் இருந்து அந்த கொடிய வைரஸை விரட்டுவோம்.

Categories

Tech |