கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்திருந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 193 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்க்குள் முடங்கியுள்ளனர். இது குறித்து இன்று வானொலியில் பேசிய பிரதமர் மோடி, நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்கு உள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழி இல்லை.
நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நானறிவேன் . கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம். விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது விதிகளை மீறுபவர்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.