கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்திருந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 193 பேர் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்க்குள் முடங்கியுள்ளனர். இதுகுறித்து மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசநலனை கருதி வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கான அடிப்படை தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், வங்கி ஊழியர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம்.
வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், நீங்களும் கவனமாக இருங்கள். கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம். 2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.