கன்னட நடிகரை, மது போதையில் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு ஆர்.டி. (RT) நகரைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னட நடிகராவார். அபிஷேக் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்க்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார்.
நேற்று இரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். அப் போது அங்கு வந்த நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் மதுபோதையில் அங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிஷேக்கை குடியிருப்பின் வரவேற்பறை ஊழியர் என தவறாக நினைத்து விமல் தங்குவதற்கு அறை கேட்டதாகவும், இதனால் அபிஷேக் ஆத்திரமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதால் நடிகர் விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கன்னட நடிகரான அபிஷேக்கை அடித்து உதைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து காயமடைந்த அபிஷேக், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இது தொடர்பாக விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்களான 5 பேர் மீது ஆபாசமாக திட்டுதல், என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் நடிகர் விமல் படபிடிப்பிற்க்காக வெளியூர் சென்று விட்டதால் விசாரணை குறித்து விமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விருகம்பாக்கம் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.