Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரசை நாம் தான் பரப்புகிறோம்”… பொறுப்போடு இருங்கள்… பிரகாஷ் ராஜ் அறிவுரை!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டு தீயைப்போல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை (21 நாள்) ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டுமக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆனால் சிலர் அத்தியாவசிய தேவையின்றி நமக்கு என்ன வந்துற போகுது என்று வெளியே ஜாலியாக சுற்றி திரிகின்றனர். இவர்களை பிடித்து போலீசார் தடியடி நடத்தியும், வழக்கு பதிவும் செய்து வருகின்றனர்.

இதனிடையே பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பிரகாஷ்ராஜ் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “வைரஸ் தானாகப் பரவவில்லை. பொதுமக்களாகிய நாம் தான் அதைப் பரப்புகிறோம். வீட்டிலேயே இருங்கள்.உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு இருங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள். என் மகனோடு நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் ” என்று அதில் கூறியுள்ளார்.

அத்துடன் தனது மகனுக்கு தேசிய கீதத்தை கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்றையும் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |