தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி அருகே இருக்கும் நல்லபொன்னம்பட்டியைச் சோ்ந்த அழகப்பன் என்பவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பகுதியைச் சோ்ந்த ஓரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும், அதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் புத்தாநத்தம் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வதந்தியை பரப்பியுள்ளார்.
இதையடுத்து வதந்தி பரப்பிய அழகப்பனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.