Categories
இந்திய சினிமா சினிமா

“மீனவர்களுக்கு உதவி செய்யுங்க”… தமிழக முதல்வரிடம் பவன் கல்யாண் வேண்டுகோள்!

சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் என பலரும், பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். இருக்க இடமில்லாமலும், சாப்பிட சாப்பாடு இல்லாமல் தங்களுடைய செல்ஃபோன் மூலம் உதவி செய்யுமாறு வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதேபோல ஆந்திர மாநில மீனவர்கள், சென்னை துறைமுகத்தில் சிக்கியுள்ளனர்.

இது நடிகர் பவன் கல்யாணுக்கு தெரியவர தமிழக முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றை எழுதி, தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழ்நாடு கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களுக்கு போதிய தங்கும் வசதி, உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இதுகுறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜனசேனை  தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன். எனவே மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இந்த விடயம் தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு, போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்களின்  ஊருக்கு அனுப்பிவைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் ஸ்ரீகாகுளம் ஜில்லா (மாவட்ட) கலெக்டர் இது குறித்து மேற்கண்ட தகவலையும் அந்த தொண்ணூற்றி ஒன்பது மீனவர்கள் பற்றின தகவல்களை அந்த கவலையுற்ற மீனவக் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களின் தொலைபேசி எண்ணையும் அதில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |