புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆனது. அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியது.
எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். பேரவையில் கிருமிநாசினியும் வழங்கப்பட்டு இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த அதிமுக எம்எல்ஏக்கள், தீர்மானம் மீதான விவாதத்தை நடத்த கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அதற்கு இடைவெளி விட்டு முற்றுகையிடுங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.