சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வரும் ஏப்., 14ம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருந்தன.
இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள். எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் தள்ளி வைக்கப்படும் என தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைப்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என அறிவித்துள்ளது.