சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்களை வைத்து கைகளை சுத்தப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக, முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும்மல்ல பல உலக நாடுகளிலும் இது தான் நிலைமை. இதனை பயன்படுத்திக்கொண்டு முக கவசம் மற்றும் ஹாண்ட் சானிடைசர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காவல்துறை சார்பில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாஸ்க் மற்றும் ஹாண்ட் சானிடைசர் பதுக்களை கண்டுபிடித்து வருகின்றனர்.
நேற்று மட்டும் 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 1 கோடி மதிப்புள்ள முக கவசமும், 7 லட்சம் மதிப்புள்ள சானிடைசர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10,000 சானிடைசர் பாட்டில்களை சார்கோப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.