உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் நடந்ததாகவும், ஊரடங்கை மீறியதாக 17,668 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கை பின்பற்றாத 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதிமீறல்கள் தொடர்பாக 14,815 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உத்தரகண்ட் பகுதியில், இதுவரை 1991 பேர் ஊரடங்கு விதிமீறல் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது வரை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.