ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனோவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆந்திராவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.
தானியார் மருத்துவமனைகளுக்கு வரும் அனைத்து வெளி நோயாளிகளின் சேவைகளையும் நிறுத்தி தங்கள் சேவை முழுவதையும் வைரஸ் தொற்றுக்கு மட்டுமே வழங்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி வைரஸ் பரவல் நிலையைப் பொறுத்து வருங்காலத்தில் தேவைப்பட்டால் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள், விடுதிகள் போன்றவையும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் நலன் மற்றும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.