சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரிப்பன் மாளிகையிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும். சமூக விலகலை பின்பற்றி கடிதத்தை பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற 3 காரணங்களுக்காக மட்டுமே அனுமதி கடிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து முக்கிய பணிகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.