மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மருத்துவ வசதிகளை மாநில, மத்திய அரசுக்கள் எடுத்து வருகின்றனர்.
நோய் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் அவசியம் என சுகாதார துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, கொரோனவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் என்று சொல்லக்கூடிய (PPEs -Personal Protective Equipments) N95 முகமூடி, ஆய்வக கண்ணாடி ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மேற்குவங்க மருத்துவர்கள் சிலருக்கு இந்த அவலம் நேர்ந்துள்ளது.
இது தொடர்பாக, பேசிய மருத்துவர், ” மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்களுக்கு ஒரு பையில் ரெயின்கோட் & சன்கிளாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்காக ரெயின்கோட்டுகளை துவைத்து உபயோகப்படுத்த றிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். மருத்துவ கல்லூரியின் துணை முதல்வரை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்த போது, பாதுகாப்பு உபகரணங்கள் (PPEs) இன்னும் வழங்கப்படவில்லை என்றும், அதற்கான பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்த போது பணிக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.