Categories
தேசிய செய்திகள்

மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: சுயதனிமைப்படுத்திக்கொள்ள புறநோயாளிகளுக்கு வேண்டுகோள்

டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை கூறியபோது, மருத்துவரிடம் சிகிச்சை பெற பல நோயாளிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்த பெண்மணி மருத்துவரை சந்தித்து சென்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவரை சந்தித்து சென்ற 1,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருவதாக கூறியது. இந்த நிலையில், இன்று மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த கிளினிக்கை சுற்றி அமைத்துள்ள வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை கிளினிக்கிற்கு வருகை தந்த நோயாளிகள் அடுத்த 15 நாட்களுக்கு வீட்டிலேயே சுய தனிமைபடுத்திக்கொள்ளுமாறு டெல்லி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவரின் குடும்பத்தினருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |