Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்… சொந்த மண்ணிற்கு உடல் கொண்டு வரப்படுமா?… கதறி அழும் குடும்பத்தினர்!

காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் 29) மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது மனைவி சீதா குமாரிக்கு திருச்சியிலுள்ள  துணை ராணுவ படை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

army man

இந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சீதா, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து அவரது முகத்தை கடைசியாக நாங்கள் ஒரு தடவை  பார்க்க வேண்டும் என்றும், அவரது உடலை கொண்டுவருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்த ராணுவ வீரரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ராமச்சந்திரன் ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அவர் திடீரென இறந்தது போனது அவரது குடும்பத்தார்கள் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தினரையே வேதனையடைய செய்துள்ளது.

தற்போது ராமச்சந்திரனின் உடல் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |