மதுரையில் தனக்கு கொரோனா உள்ளதாக பக்கத்து வீட்டினர் வீடியோ பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.
மதுரையை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மதுரை பிபி குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி உள்ளார். சளி இருமல் மற்றும் உடல்சோர்வு இருந்ததால் முஸ்தபாவிற்கு கொரோனா இருக்கலாம் என்று கருதிய அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்காக இருவரையும் அவசர ஊர்தியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவசர ஊர்தி வராத நிலையில் பக்கத்து வீட்டினர் சரக்கு வாகனம் ஒன்று தயார் செய்து மதுரை மருத்துவமனைக்கு முஸ்தபா மற்றும் அவரது தாயையும் அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் முஸ்தபாவிற்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும் தன்னுடைய தாயாருடன் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் முஸ்தபா மருத்துவமனை செல்லும் பொழுது பக்கத்து வீட்டாரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான முஸ்தபா சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.