ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. புனேவில் இருவர், புல்தானாவில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஹரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த 67 வயதான ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (பிஜிஐஎம்ஆர்) அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அம்பாலா தலைமை மருத்துவ அதிகாரி குல்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,600 தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, நேற்றும் மட்டும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 ஆக உயந்துள்ளது என தெரிவித்தார். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 110 பேரும் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆகும். இந்த நிலையில், மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.