நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலம் சந்தை பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் வாழைத்தார் ஏலம் சந்தையில் போதிய சமூக இடைவெளி இல்லாமல் வாழைத்தார்கள் ஏலம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வாழைத்தார் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது. வாழைத்தார் ஏலம் நடத்த ஏதுவாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாழைத்தார் சந்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இங்கு சமூக இடைவெளி விட்டு வாழைத்தார்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த வாழைத்தார்களை லாரிகளில் கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதாலும் வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. கற்பூரவள்ளி, ரஸ்தானி ஆகிய வாழைத்தார்கள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஏலம் போகும் என்ற நிலையில் தற்போது 70 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.