கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மதுபானம் வழங்க, கலால் துறைக்கு உத்தரவிட்டுருந்தார். மதுபானம் கிடைக்காதது சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வந்தது.
இதேபோன்று மதுவிற்கு அடிமையான நபர்களை, சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், மதுபான விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுவரை 3 மனுக்கள் பதியப்பட்டன. இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிமன்றம், மதுபான விற்பனைக்கு 3 வார காலம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.