Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடல்!

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவது தொடர்கதையாக உள்ளது.

ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளிய வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கடைகள் மட்டும் நேர நிர்ணயத்துடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரையில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் மதுரையில் இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை நகர் ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் மதுரையில் ஆட்டு இறைச்சி விற்பனையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பில், கொடுமையான கொரோனா வைரஸ் நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக வரும் 14ம் தேதி வரை மதுரை மாநகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Categories

Tech |