துவரங்குறிச்சியில் முட்புதருக்குள் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, பத்திரமாக குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியிலுள்ள முட்புதரின் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று காலை பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தான், அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்தது.
இதையடுத்து அந்த இளைஞர்கள் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை அங்கிருந்து மீட்டனர். அப்போது அது 10 மாத பெண் குழந்தை என்பது தெரியவந்தது.. தவழ்ந்து தவழ்ந்து முட்புதருக்குள் சென்று விட்டதால் குழந்தையின் கையில் முள் குத்தி கிழித்து காயம் ஏற்பட்டது.. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து குழந்தையை, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.
பின்னர், குழந்தைக்கு காவல்துறையினர் புத்தம் புது ஆடை வாங்கி போட்டு விட்டனர்.. மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தையை பெண் காவலர் ஜெயலட்சுமி தான் கையில் தூக்கி வைத்திருந்தார். அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கிருந்தவர்கள் குழந்தையை தொட்டு தூக்க, அது அழத்தொடங்கியது. இதனால் குழந்தையை அந்த பெண் காவலர் வாங்கியதும் அழுகையை நிறுத்திவிட்டு இணக்கமாக பழகியது. அதனைத்தொடர்ந்து மணப்பாறை துணை காவல் ஆணையர் பிருந்தா முன்னிலையில், குழந்தைகள் நலக்குழுவிடம் அந்த குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், அந்த பெண் குழந்தையை தூக்கி வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? எதற்காக இப்படி முட்புதரில் வீசி சென்றார்? என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.