அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் கூடைப்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய இரு குழந்தைகள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது பிள்ளைகள் இருவரையும் பிரையன் கிறிஸ்டிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது 2 வயது மகன் பிரிசோன் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஒன்பது வயதான மற்றொரு மகன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து டெட்ராய்டு மற்றும் மிச்சிகன் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.