தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ் என்பவன் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்..
கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனது.. இதனால் மிகுந்த மனமுடைந்த முகுந்தன் வருமானமின்றி தவித்து வந்ததால் வேறு வழியில்லாமல் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த சூழலில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டுக்கு சென்ற முகுந்தன் தாயகம் திரும்ப முடியவில்லை.
இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டது.. இதனையடுத்து முகுந்தனின் மனைவி வரலட்சுமி குறுவை விவசாயம் செய்யத் தொடங்கினார். ஆனால், கொரோனா ஊரடங்கின் காரணமாக விவசாய பணிகள் செய்ய ஆட்கள் யாரும் வேலைக்கு வராத நிலையில், தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற வரலட்சுமியிடம் மகன் பிரகதீஷ், தான் விவசாயம் செய்வதாக கூறினான்..
அதனைத்தொடர்ந்து தாயும், 9 வயது மகனும் இணைந்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.. தனது தாய் மற்றும் தாத்தாவுக்கு உதவியாக வரப்பு வெட்டுதல், களை பறித்தல் போன்ற விவசாய பணிகளை மிகுந்த ஆர்வமாக செய்து வரும் பிரகதீஷ், விவசாய கல்லூரியில் சேர்ந்து சிறந்த விவசாயி ஆகப்போவதாக கூறுகிறான்.