தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில் நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு நம்முடைய அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியாளர்களுக்கு இளைப்பாறுவதற்கும், மதிய வேலைகளில் உணவு அருந்துவதற்கும், குடிநீர் பருகவும் போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையும் சிறப்பாக செயல்படுத்தி நிழல் படங்களுடன் மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைத்தீர்கள். இந்நிலையில் தூய்மை பணியாளர் களுக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமின்றி, மற்ற அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், துணை அலுவலகங்கள் போன்றவற்றிலும் செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வசதிகளை செயல்படுத்திய பிறகு நிழல் படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பொது மக்களின் வசதிக்காக அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவறை வசதியை செயல்படுத்த வேண்டும். அதோடு அரசு அலுவலகங்களில் கழிவறை இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி அதற்கான நிழற்படங்கள் மற்றும் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.