பெல்ஜியமில் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படுவதாக இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த தொடக்கப்பள்ளியானது வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படவிருந்ததால் அங்கு கட்டுமானப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் அங்கு கட்டுமான பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதில் தொழிலாளர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கி தவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அதில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதேசமயம் 9 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிலும் மூன்று பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.