கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு மருந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவி செய்ய முடியுமா என நோயாளியின் உறவினர் கேரள தீயணைப்புத்துறையை நாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து கேரள தீயணைப்புத் துறையினர் எம்.வி.ஆர் கேன்சர் சென்டரில் மருந்தை வாங்கி நீலகிரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆபத்து நிறைந்த சூழலில் மனிதாபிமானத்துடன் பணியாற்றிய கேரள தீயணைப்புத் துறையினருக்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.