Categories
தேசிய செய்திகள்

’23 பேர் மரணம்… 1200 பேர் மீது வழக்குப்பதிவு… பல வருட தொடர் விசாரணை’ – வியாபம் ஊழலில் 31 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வியாபம் ஊழல் வழக்கில் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ ஊழல் தொடர்பான வழக்கில் தற்போது சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல சந்தேக மரணங்கள், திகில்கள் நிறைந்திருந்த இவ்வழக்கில் மொத்தம் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கான குற்றங்கள் குறித்த விவரம் நவ.25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி. சாஹூ என்று தெரிவித்துள்ளார்.

Image result for Vyapam Corruption

‘வியாபம்’ ஊழலும்… திகில் மரணங்களும்…

மத்தியப் பிரதேசத்தில் அரசு வேலைகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளை நடத்துவதற்காக, ‘ வியாவ் சாயிக் பரீக் ஷா மண்டல்’ (’வியாபம்’, இது தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி. போல) என்ற தொழில்முறை தேர்வு வாரியம் 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள், தொழிற் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், பணியாளர் நியமனங்களுக்கான தேர்வுகள், காவலர் பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட 13 வகையான அரசுத் தேர்வுகளை இந்த வாரியம் ஏற்று நடத்துகிறது.

Image result for Vyapam Corruption

சமீபத்தில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடைபெற்றதாக கண்டறியப்பட்டது. இதேபோல தான் இந்த வாரியத்திலும் பணத்தை வாங்கிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வுகளை எழுதுவது, தகுதியற்ற மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பது போன்ற முறைகேடுகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்கான ஏஜெண்டுகளும் புற்றீசல் போலப் பெருகினர். இதனால்தான் இதற்கு ‘வியாபம் ஊழல்’ எனப் பெயர் வந்தது. இந்த முறைகேட்டில் பல அரசியல் தலைகளின் பெயர்களும் அடிப்பட்டன. விவகாரம் பெரிதாகவே அப்போதைய ம.பி. முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், வியாபம் ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை 2009ஆம் ஆண்டு அமைத்தார்.

செய்தியாளர் அக்‌ஷய் சிங்(இடது), மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண் சர்மா(வலது)

 

அம்மாநில காவல் துறையினர் 2013ஆம் ஆண்டு இவ்வழக்கில் சிலரைக் கைது செய்ததையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களில் சிலர் தானாக சரண்டராகி வாக்குமூலம் அளித்தனர். முன்னரே சொன்னது போல பல அரசியல் தலைகளின் பெயர்கள் இம்முறைகேட்டில் அடிபட்டதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சரண்டராகியவர்கள் என வழக்கில் சம்பந்தப்பட்ட 23 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். ஆனால், 46 பேர் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for நம்ரதா தாமோர்

ஆளுநரின் மகன், மருத்துவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏஜெண்ட் மருத்துவ மாணவி என நீண்டு கொண்டிருந்த மரணப் பட்டியலில் செய்தியாளர் ஒருவரின் மரணமும் இடம்பெற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முறைகேட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவ மாணவி நம்ரதா தாமோர் என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய பெற்றோரைச் சந்தித்து பேட்டியெடுக்கச் சென்றுள்ளார் செய்தியாளர் அக்‌ஷய் சிங். அவர் பேட்டியெடுத்து வெளியில் வந்து டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போதே, வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார். இது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலையை உண்டாக்கி, ஆளுங்கட்சிக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

Image result for A CBI court has sentenced 31 persons to life in the Vyapam Corruption case.

இதனால், இவ்வழக்கை விசாரித்த மாநில காவல்துறை, 2015ஆம் ஆண்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. பின்னர் 40 பேர் கொண்ட சிபிஐ குழு, முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் 1,200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியது. நான்கு வருட தொடர் விசாரணைக்குப் பிறகு, தற்போது 31 பேரை குற்றவாளிகளாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்த 12 பேர், இடைத்தரகர்கள்(ஏஜெண்ட்) உள்ளிட்ட 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் சதீஷ் தின்கர் என்பவர் கூறியுள்ளார்.

Categories

Tech |