சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் தெருவோரத்தில் உறங்கியுள்ளனர். கண் விழித்து பார்க்கும்போது தள்ளுவண்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் 14,500 ரூபாய் பணத்தையும் சேர்த்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்நிகழ்வு தொடர்பாக மெரினா கடற்கரை காவல் துறையினரிடம், ஜெயராமன் புகார் அளித்தார். மேலும், தள்ளுவண்டியை திருடிய நபர் செம்மஞ்சேரியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தும் கொடுத்துள்ளார். ஆனால், திருடிய நபரை காவலர்கள் விசாரிக்காமல் அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராமன், ” திருட்டு குறித்து 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் மெரினா காவலர்கள் எடுக்கவில்லை. சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யவில்லை. மேலும், திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் “ என்று கூறினார்.